கோயம்புத்தூர்: கடந்த மே 15ஆம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாகப் பேசியதாக, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி, ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை குற்றவியல் கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். அதனை அடுத்து, சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, கோவை ஜே.எம் 3 நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், "என்னைப் பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக கூறியபடிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், "சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில், பொது அமைதிக்கு எந்த குந்தகமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது.