கோயம்புத்தூர்: 'சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி' என்ற அழகிய கவிதைக்கேற்ப கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நகரம் கைத்தறி மென்பட்டு சேலை தயாரிப்பில் தனி முத்திரை பதித்து வருகிறது.
சிறுமுகை வட்டாரப் பகுதிகளான திம்மராயம்பாளையம், மூலத்துறை, வெள்ளிக்குப்பம்பாளையம், பகத்தூர், எஸ்.ஆர்.எஸ்.நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.நெசவுத் தொழிலே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
சிறுமுகை கைத்தறி பட்டு விற்பனை குறித்து பொதுமக்கள் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இங்குள்ள நெசவுத் தொழிலாளர்கள் திருக்குறள் சேலை, மயில் தோகைசேலை, மணமக்கள் சேலை, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்ம், சீன அதிபர் ஆகியோரின் உருவங்களை திரைச்சீலையில் அற்புதமாக அழகாக வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். மேலும் சிறுமுகை வட்டார பகுதியில் உள்ள 6 நெசவுத் தொழிலாளர்கள் தேசிய விருது பெற்றுள்ளனர்.
களைகட்டும் வியாபாரம்:இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்புது ரகங்களை தயாரிக்க 200க்கும் மேற்பட்ட டிசைன்களை தனியார் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.
அதன் அடிப்படையில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தங்கள் கற்பனைத்திறனில் காண்போர் மனதை கவரும் விதமாக பல்வேறு வர்ணங்களில் கைத்தறி பட்டு சேலைகளை புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சில்க்ஸ் பஜாரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் கைத்தறி பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.
இதையும் படிங்க:பருத்தி நூல் முதல் பட்டு வரை.. தீபாவளி விற்பனையில் களைகட்டும் கைத்தறி சேலைகள்!
பல ரகங்களில் சேலைகள்:இதுகுறித்து துணிக்கடை உரிமையாளர் தண்டபாணி காரப்பன் கூறுகையில், "கடைகளில் கைத்தறி பட்டு சேலை, சாப்ட் சில்க், சில்க் காட்டன், காட்டன் மற்றும் பேன்சி ரகங்களாக சுத்த லினன் சேலைகள், ரூபியான் சேலைகள், டசர் சில்க் சேலைகள் உட்பட மகளிர் மனதை கவரும் வண்ணம் புதுப் புது ரகங்களில் சேலைகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டு சேலை கைத்தறி கடைகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தாங்கள் விரும்பும் கைத்தறி பட்டு சேலைகளை பெண்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். சாப்ட் சில்க் சேலைகளை பெண்கள் அணிய அதிக அளவு விரும்புவதால் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவு சாப்ட் சில்க் சேலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.
மேலும் "சில்க் பஜாரில் உள்ள கடைகளில் இருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு கைத்தறி பட்டு சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
உடுத்துவதற்கு சுலபமாக உள்ளது:தொடர்ந்து கைத்தறி பட்டு சேலை வாங்க வந்த பெண்கள் கூறுகையில்,"மற்ற பட்டு சேலைகளை காட்டிலும் கைத்தறி உருவாகும் பட்டு சேலைகள் எடை குறைவாக இருப்பதால் அதனை உடுத்துவது எளிதாக உள்ளது. மேலும் மற்ற பட்டு சேலைகள் சிறிது நேரம் மட்டுமே கட்ட முடியும். ஆனால் இந்த பட்டு சேலைகளை நாள் முழுவதும் கட்டினாலும் எடை தெரிவதில்லை. குறிப்பாக சுத்தமான பருத்தி நூலால் நெசவு செய்யப்படுவதால் உடல் குளிர்ச்சியாகவும் இருப்பதால் இதனை விரும்பி வாங்குவதாக" தெரிவித்தனர்.