கோயம்புத்தூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று முடிந்தது. அந்தவகையில், கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், வடவள்ளி அருகே பாப்பநாயக்கன்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இந்த வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில், திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் வெயில் காரணமாக பந்தல் அமைத்து, பூத் கமிட்டியினர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள், வாக்களிக்க வரும் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறதா? என்பதை சரிபார்த்தல் மற்றும் பூத் சிலிப் வழங்குதால் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். அப்போது, திமுகவினர் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிக அளவிலான வாக்காளர்கள் குவிந்திருந்ததாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவினர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், அங்கு சென்ற மாநகர காவல் உதவி ஆணையாளர் நவீன் கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, காவல்துறையினர் மற்றும் திமுக தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பி.என்.புதூர் திமுக பகுதி கழகச் செயலாளர் பாக்யராஜ் என்பவர், காவல் துறையினரை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பாக்யராஜை காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் பாக்யராஜை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது. பின்னர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இந்நிலையில், தற்போது வாக்குச்சாவடி அருகே திமுக பிரமுகரை காவல்துறையினர் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: வேங்கைவயலில் தேர்தலைப் புறக்கணித்த மக்கள்! க்ளைமாக்ஸ் என்ன? - Lok Sabha Election 2024