கோயம்புத்தூர்: சமுக வலைத்தளக் கருத்துருவாக்கம் செய்யும் நபர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Face Book), யூடியூப் (Youtube) ஆகிய இணையதளங்களில், அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட பக்கங்களின் அட்மின்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினர். குறிப்பாக, இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதில் பேசிய கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருந்தால், அதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு சொல்வது அவசியம்" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், "வழக்கமான காட்சி, பத்திரிகை ஊடகங்களுக்குச் செய்திகளைக் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளக் கருத்துருவாக்கம் செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு செய்தியைப் பகிரும்பொழுது அதன் உண்மைத் தன்மையையும், அதன் பின்னணியையும் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
தவறான தகவல்களைப் பகிர்ந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும். ஒரு செய்தி குறித்துப் பகிர்வதற்கு முன்னர், தகவல்களைச் செய்தி தொடர்புத் துறையின் மூலமோ அல்லது அது தொடர்பான அதிகாரிகளிடமோ உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக்கூடிய சூழலில், போதைப்பொருட்கள் பயன்பாட்டைத் தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை எடுத்துரைத்தார். மேலும், இக்கூட்டத்தில் எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைத்தளக் கணக்குகளை டேக் (tag) செய்யுமாறும்" அறிவுரை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மொழிப்பாடம் தேர்வினை எழுதாத 12 ஆயிரம் மாணவர்கள்!