தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்மேற்கு பருவமழை எதிரொலி; கோவை மாவட்ட நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை! - Coimbatore Rain Alert - COIMBATORE RAIN ALERT

Flood Alert Warning In Kovai: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்ட நிர்வாகம், மழைக்கால வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 3:43 PM IST

Updated : Jul 16, 2024, 4:25 PM IST

கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இன்று (ஜூலை 16) மற்றும் நாளை (ஜூலை 17) அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நீர்நிலைகள்:கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி (Selfie) எடுக்கஅ செல்லவோ கூடாது. இதுபோன்ற ஆபத்து விளைவிக்கும் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பான இடங்கள்:ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மின்சாரம்: மழை பெய்யும் நேரங்களில் மரங்கள் நிறைந்த பகுதியில் இருக்க வேண்டாம்; உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்; வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாதனப் பொருட்களை பாதுகாப்பாக கையாளுங்கள்.

பாதுகாப்பற்ற கட்டிடங்கள்:மழை பெய்யும் போது பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம். பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். மழை வெள்ளநீர் தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுதல் கூடாது.

உதவி எண்:நீர்நிலைகளின் கரையோரம் வெள்ள அபாயம் அல்லது தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விருப்பப்படும்பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பில்லூர் அணை:நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இன்று (ஜூலை 16) அதிகாலை பில்லூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், அணையின் நீர்மட்ட உயரம் 88 அடியில் இருந்து 97 அடியை எட்டியது.

இந்த சூழலில் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் உள்ள நான்கு மதகுகளின் வழியாக 8 ஆயிரத்து 160 கன அடி நீரும், மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தமாக 14 ஆயிரத்து 160 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு; பவானிசாகர் அணை கிடுகிடுவென உயர்வு

Last Updated : Jul 16, 2024, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details