கோயம்புத்தூர்: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது 5 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் தேனியில் அவரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் காரிலிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவர் மீதும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் வருகின்ற 17ஆம் தேதி வரை, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷணன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க ஐந்து நாட்கள் தேவைப்படுகிறது என சைபர் கிரைம் போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய விவகாரம் பற்றி மேல் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கோவை சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை அந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கன்னியாகுமரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்! - Kanniyakumari Tourist Death