தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 நாட்களுக்கு டீ செலவு ரூ.27.52 லட்சமா? - கோவை மாநகராட்சி விளக்கம் என்ன? - Coimbatore Corporation Meeting - COIMBATORE CORPORATION MEETING

Coimbatore Corporation Meeting: கோவை குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு 12 நாட்களுக்கு டீ, காபி செலவு ரூ.27.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை குப்பை கிடங்கு மற்றும் மாமன்ற சாதாரண கூட்டம்
கோவை குப்பை கிடங்கு மற்றும் மாமன்ற சாதாரண கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 11:09 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. அதில் மொத்தம் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கூட்டத்தில் 318-ஆவது தீர்மானமாக, கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தீப்பிடித்து எரிந்த நிலையில், அந்த தீயை அணைக்க ரூ.76 லட்சத்து 70 ஆயிரத்து 318 செலவிடப்பட்டதாக இந்த செலவினத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் தீர்மானம் வைக்கப்பட்டது.

குறிப்பாக உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றிக்கு மட்டும் ரூ.27.52 லட்சம் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு, தேநீர் உள்ளிட்டவற்றுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சியின் விளக்கம்: இந்த நிலையில், இதுகுறித்து கோவை மாநகராட்சி தரப்பில் விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, "வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் பரவி எரிந்த நிலையில், கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. அதற்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், அதை இயக்க ஒரு வாகனத்திற்கு 14 பேரும் பணிபுரிந்தனர்.

அந்த தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தண்ணீர் லாரிகள் நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 லாரிகள் வரை பயன்படுத்தப்பட்டது. மேலும், தீ உச்சம் பெற்று எரிந்த 12 நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் சுழற்சி முறையில், 3 குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் பணியாற்றினர்.

தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என மூன்று குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குத் தினமும் காலை, மதியம், இரவு 3 வேளைகளும் தரமான உணவு வழங்கப்பட்டதுடன், வெயில் காலம் என்பதால் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த தீத்தடுப்பு பணிகளில் செலவினமாக 27.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த செலவினங்கள் தற்போது நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் பார்வைக்கும், பதிவிற்கும் வைக்கப்பட்டது.

மேலும், தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்த மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாமன்ற கூட்டத்தில் துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join ETV Bharat Whats App Channel Click Here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நவி மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details