கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகிய 3 பேரும் கைகளில் குப்பைக்கூடைகளுடன், தனியாருக்கு குப்பை எடுக்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், வீடு வீடாக குப்பை எடுக்காத நிலையில் எதற்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், "2 மாதங்களுக்கு பிறகு இன்று (பிப். 5) மாமன்ற கூட்டம் நடத்தப்படுகின்றது. குப்பைகளை எடுக்க தனியாருக்கு 170 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் குப்பைகளை ஒழுங்காக எடுப்பதில்லை. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது.
குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை எனில், கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். டெண்டர் விடப்பட்ட தனியார் நிறுவனம், குப்பை எடுக்க போதுமான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. யாரோ ஒரு தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகின்றது" என்று தெரிவித்தார்.