சென்னை: கடலில் ஆபத்தான பகுதி எனக் குறிப்பிட்டு, இங்கே குளிக்கக்கூடாது என காவல்துறையினர் சார்பில் பதாகைகளை கடலோர பகுதியில் வைத்தாலும், சிலர் அத்துமீறி குளிப்பதும், அதனால் பல நேரங்களில் உயிரிழப்புகள் நடப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடல் அலையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் 2 சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது, அதனைக் கண்ட கடற்கரை பாதுகாப்புக் குழுவினர், துரிதமாகச் செயல்பட்டு 2 சிறுவர்களையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 சிறுவர்களும் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சிறுவர்கள் கடல் அலையில் சிக்கிய சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடலில் யாரும் குளிக்காத வகையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி: ஓட்டு போட காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து.. வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?