சென்னை: திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், மா சுப்பிரமணியன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, பிரபாகரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றேனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
'' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தந்தை பெரியார் விருது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது ஆகிய 10 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும்க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்திற்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.