சென்னை:புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஹிந்தியை வைத்து அரசியல்:
மேலும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மக்கள் மத்தியில் அரசியல் நோக்கத்தோடு ஹிந்தியை எதிர்க்கிறது. இவ்வாறு ஹிந்தியை எதிர்ப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை. புதிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை அரசியல் சாசன விதிமுறைப்படி நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மட்டுமே அரசியல் நோக்கமாக இந்த கல்வி கொள்கையை எதிர்க்கிறது.
ஹிந்தி முதன்மையான மொழி:
மத்திய அரசு எந்த மாநிலங்களையும் தாய்மொழியை மறந்து ஹிந்தியை கற்றுக்கொள்ள சொல்லவில்லை. இந்தியாவில் ஹிந்திதான் முதன்மையான மொழியாக உள்ளது. இந்த கருத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசு மக்களை குழப்புகின்றனர். அரசியல் காரணங்களை வைத்து புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் புதியக் கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி இல்லை என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.