தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயநாடு சம்பவ எதிரொலி; தமிழக மலைப்பகுதிகளில் இடர்பாடுகள் குறித்து ஆய்வு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - study in hills areas of TN - STUDY IN HILLS AREAS OF TN

Study in hills areas of TN: வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 5:00 PM IST

சென்னை:கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெருந்துயரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளடக்கிய மலைப் பகுதிகளில் பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேசியக் கொடி ஏற்றினார். அப்போது பேசிய அவர், “சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன.

அண்மையில் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டிலும் நீலகிரி, வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு, ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநிலப் பகுதிகள் அதிகம் உள்ளன.

அங்கு பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடா்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கும். அந்தப் பரிந்துரைகளின் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் தினமும் ஈடுபடுத்தி வருகிறேன். இந்தியாவுக்கு வழிகாட்டியாக, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன்.

மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள் எனக்கு அளித்து வரும் வெற்றியின் மூலமாக தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு.

இந்திய நாடு இன்னல்களை வென்ற நாடு மட்டுமல்ல, உலகுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டிய நாடு. அத்தகைய இந்திய நாட்டின் பொறுப்புமிக்க குடிமக்களாகிய நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி, நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:வீட்டு மனை அங்கீகாரம் பெற NOC உத்தரவு.. சூலூர் விமானப்படைத் தளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details