சென்னை:இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் இணையதள பக்கத்தின் இயல்புநிலை மொழியாக ஆங்கிலம் இருந்து வந்தது. இந்த நிவையிவ் இன்று காலை முதல் அந்த இணையதளத்தின் முகப்பு முழுக்க இந்தி மொழியில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், மொழியை தேர்வு செய்யும் கிளிக் பட்டன் வசதியும் இந்தி மொழியில் இருப்பதால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் தமிழ் போன்ற மாநில மொழிகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எல்.ஐ.சி நிறுவன நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு (Credits- CM Stalin X Page) இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது.
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக இந்தி மொழியை திணிக்கும் முயற்சி. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கு துரோகம் இழைக்க எப்படி இவ்வளவு தைரியம் உள்ளது? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பதிவில், “ பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்புநிலை மொழியாக (Default Language) இந்தி மாறியுள்ளது.
இதனால், இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று இபிஎஸ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், “நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, பத்தாண்டு காலத்தில் மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருகிறது. வானொலி, தொலைக்காட்சிகளை இந்தி மயமாக மாற்றுகிறது. குற்றவியல் சட்டங்களை மாற்றி இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்று பல வகைகளில் மத்திய பாஜக அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக புகுத்தி வருகிறது.
இதையும் படிங்க:"தமிழகம் தீவிரவாதத்தை வளர்க்கிறது என மத்திய அமைச்சர் கூறியது சங்கடமளிக்கிறது"- எம்.பி துரை வைகோ
ஏற்கனவே மத்திய அரசின் சமூக ஊடகங்களில் முழுதாக இந்தி மொழிதான் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும்.
ஆனால் மத்திய பாஜக அரசு இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் நிலை ஏற்படும். எனவே இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி இணையதளத்தை முன்பிருந்ததைப் போல ஆங்கில மொழியில் உடனடியாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்