சென்னை:தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 14ஆம் தேதி உள்ளிட்ட தேதிகளில் மத்திய அரசு நடத்தத் திட்டமிட்டுள்ள யுசிஜி நெட் தேர்வு தேதியை மாற்றி அமைக்கும்படி கோரிக்கை விடுத்து மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,"தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து தங்களுக்கு(மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான்) கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்றும் கடிதம் எழுதியுள்ளேன். ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது .இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்லாது, ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. பொங்கல் பண்டிகையைப் போலவே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.