சென்னை:தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று IND-TN-10-MM-2517 மற்றும் IND-TN-10-MM-284 என்ற பதிவு எண் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22ஆம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது. மேலும் தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.