தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழ்நாட்டில் பா.ஜ.க. பூஜ்யம்” "இந்தியா கூட்டணி அமைத்தார்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என வரலாறு சொல்லும்" - மு.க.ஸ்டாலின்.. - india allaince

VCK Jananayagam conference: இந்தியாவின், ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையைப் பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி விசிக மாநாட்டில் மு க ஸ்டாலின் உரை
திருச்சி விசிக மாநாட்டில் மு க ஸ்டாலின் உரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 10:49 PM IST

Updated : Jan 26, 2024, 11:03 PM IST

திருச்சி விசிக மாநாட்டில் மு க ஸ்டாலின் உரை

திருச்சி:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் சனநாயகம்' மாநாடு இன்று நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு க ஸ்டாலின், உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகையில், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பதற்கு இலக்கணமாகத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியிலே திருமாவளவன் படை வீரர்கள் ஜனநாயகம் காக்கக் கூடியிருக்கிறீர்கள்.

திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக தி.மு.க.வில் பணியாற்றிய காலத்திலிருந்தே தெரியும். அப்போதே கல்லூரி மேடைகளிலும் - கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்றைக்குக் கழகத்துக்குள்ளே முழங்கினார். இன்றைக்குக் கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார்.

சமூகநீதி - சமத்துவச் சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக தொல். திருமாவளவன் இந்த ‘வெல்லும் ஜனநாயகம்‘ மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். "வெல்லும் ஜனநாயகம்" என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். இதற்கான கட்டளையைப் பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிவோம். ஜனநாயக அரசை நிறுவுவோம் என்று சபதம் ஏற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார் திருமாவளவன்.

இந்த சபதமும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி.இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால்தான், குடியரசு நாளான இன்றைக்கு இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. பூஜ்யம். அதனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.வை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம்தான் இந்தியா கூட்டணி.

ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதை இலக்காகக் கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. பா.ஜ.க. என்று சொல்வதால், இது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என்று சுருக்கிவிட முடியாது. இந்தியாவின், ஜனநாயகத்தை - மக்களாட்சியை - மதச்சார்பின்மையை - பன்முகத்தன்மையை - ஒடுக்கப்பட்ட மக்களை - ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது. இதுதான் நம்முடைய இலக்கு.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. ஏன் மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கிவிடுவார்கள். கண்ணுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து - யூனியன் பிரதேசங்களாக ஆக்கினார்கள். தேர்தல் கிடையாது, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வீட்டுச் சிறை. இதுதான் பா.ஜ.க. பாணி சர்வாதிகாரம்.அந்த நிலைமைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்.

கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா? உலக நாடுகள் என்ன நினைக்கும்? சிரிக்க மாட்டார்களா? "உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதுதான் உங்கள் ஜனநாயகமா என்று கேட்க மாட்டார்களா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய ஆட்சியாக பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்.நமக்கு முன்னால் இருக்கும் நெருக்கடி, நாம் உணர்ந்திருப்பதை விட மிக மோசமானது,மிக மிக மோசமானது.பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் சிதறக்கூடாது. பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடையே அடையாளம் காட்ட வேண்டும்.

வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரியுமா, "இந்தியா கூட்டணி அமைத்தார்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்" இதுதான் வரலாறாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும். ஜனநாயகம் வெல்லும், அதனைக் காலம் சொல்லும். தொல். திருமாவளவனும் வெல்வார், அதையும் காலம் சொல்லும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்காக இல்லை" - சீமான் குற்றச்சாட்டு..!

Last Updated : Jan 26, 2024, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details