சென்னை:2024-25ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்தி காட்டியுள்ளோம்.
வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை திருத்தி அவர்களை மாற்றுவதற்கு பறவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி என்னால் மட்டும் உருவானது அல்ல, என்னுடைய அனைத்து அமைச்சரவை சகாக்களால் உருவானது.