சென்னை: லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நான் படித்தது பிரஸிடன்ஸி கல்லூரி. என்னுடைய மகன் உதயநிதி படித்ததும் இந்த கல்லூரியில் தான். உதயநிதி மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அவர் அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோர் இங்கு தான் படித்தார்கள். நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலமைச்சராக மட்டுமல்லாமல், உங்கள் கல்லூரியில் படித்த மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை இருந்ததா? தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்போது.
கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோமே. அந்த செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கித் தந்த கருணாநிதியுடைய பிறந்த நாளில் 1924-ஆம் ஆண்டில் இந்த லயோலா நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1925-ம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னார்தான் படிக்கலாம் - இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலை திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று.