தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிபிஐ விசாரணையை எடப்பாடி கேட்கலாமா?" - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் விரிவான விளக்கம்! - mk stalin speech - MK STALIN SPEECH

cm stalin on kallakurichi issue: தன் மீதான ஊழல் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாமா என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின் (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:04 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அனுமதி கோரி தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், '' கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20-06-2024 அன்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அவையிலே விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அன்றைய தினம் அவையில் இருந்து முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். மாறாக, தேவையற்று அவை கூடியதும் கிளப்பினார்கள்.

அவையினுடைய விதிமுறைப்படி கேள்வி நேரம் முடிந்ததற்குப் பிறகுதான் மற்ற அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் விதி இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதிமுறையை மீறி உடனடியாக அந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இங்கே ஒரு பெரிய ரகளையே செய்திருக்கிறார்கள்.

கேள்வி-பதில் நேரம் முடிந்ததும், கள்ளக்குறிச்சி பிரச்சினையைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம் என்று பேரவைத் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும் அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அப்படி நடந்து கொண்டார்கள்.

அதற்குப் பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அவர்களை அன்றைக்கு அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகுதான் நான் அன்றைக்கு அவைக்கு வந்தேன். வந்ததற்குப் பிறகு இதைக் கேள்விப்பட்டவுடன் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிற போது எதிர்க்கட்சி அதுவும் பிரதான எதிர்க்கட்சியான அ.திமு.க அவையில் இருக்க வேண்டும் எனவே மறுபரிசீலனை செய்து இதை சரிசெய்ய வேண்டுமென்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் வைத்தேன்.

நீங்களும் அதைஏற்றுக்கொண்டு, அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதித்தீர்கள். ஆனால், அதற்குப் பிறகும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வேறு ஒன்றுமல்ல.. நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றி அவர்களுடைய மனதை உறுத்துகிறது.. . அதை மக்களிடமிருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தக் காரியத்தைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த போது அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை தரச் சொல்லி இருக்கிறேன். குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.

கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.. இறந்தோர் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் தரப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் இந்த அரசு எடுத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கிடையில் நேற்றைய தினம்கூட ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம்தான்.. ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்திலே இருக்கக்கூடிய உரிமை அது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும்.

ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தில்கூட திரும்பத் திரும்ப சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள். இதே எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரப்பட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அதில் முறைகேடு நடந்திருக்கிறது.. அதற்கு சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ மீது நம்பிக்கை இருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து பேரவைத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க:அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு கோரிய முதல்வர்.. நெகிழ்ந்த சபாநாயகர்.. ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details