திருவண்ணாமலை:சென்னை பல்லாவரத்தில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி குறித்து பேசியதாவது "அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
பாதிப்புகளைச் சீர் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார் ஆனால் நிதி இன்னும் வரவில்லை.
இதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? "சும்மா நீங்கள் கேட்கும் போதெல்லாம் தர முடியாது" என்று நக்கலாகப் பதில் சொன்னார். இதனைப் பார்க்கும் போது ஒன்று தெளிவாகப் புரிந்தது. நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள்.
மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தியவர் தான் அவர். ஆணவ சிந்தனை கொண்ட நிர்மலா சீதாராமன் 5000 கோடி கொடுத்துவிட்டோம். அதற்கு கணக்கு எங்கே என கந்துவட்டிக் காரர் போல பேசியுள்ளார். அது முதலில் மத்திய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.
ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. அதாவது உங்களுக்கு புரியும்படி நான் சொல்கிறேன், பொதுவாக ADB, KFW போன்ற வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால். அந்த பணம் மத்திய அரசின் கணக்கிற்கு வந்த பிறகுதான் மாநில அரசுக்கு மாற்றம் செய்யப்படும். அப்படி வரக்கூடிய பணத்தை மத்திய அரசு கொடுத்தது என்று எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்கள்? மாநில அரசு நிதியிலிருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. எதற்குமே நிதி கொடுக்காத நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.
நாங்கள் கேட்கும் நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில்(NDRF) இருந்து. அதை செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடியை வைத்து இருக்கிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் கொடுத்தாக கூறும் நிதி பேரிடர் ஏற்பட்டாலும் பேரிடர் ஏற்படவிட்டாலும் நமக்கு கண்டிப்பாக தர வேண்டிய( SDRF) மாநில பேரிடர் நிதி. இதில் இருந்து நிதியைக் கொடுத்து விட்டு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுத்தோம் எனக் கூறுவது கரகாட்ட படத்தில் வரும் 'அதுதான் இது இது தான் அது' என்ற வாழைப்பழ கமெடியை தான் நினைவூட்டுகிறது" என்றார்.
இதையும் படிங்க:கச்சத்தீவு குறித்து பேசும் பாஜகவினர் அருணாச்சல் விவகாரம் குறித்து பேச தைரியம் இருக்கிறதா? - செல்வப்பெருந்தகை ஆவேசம்!