சென்னை:மத்திய அமைச்சரவை "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்த மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்ற மோசமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் செயல்படுத்த முடியாது.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தத்துவதைச் சிதைத்து, ஆட்சியைச் சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார். கூடவே SayNoToONOE என்ற ஹேஷ்டேக்கையும் அவர் சேர்த்திருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்:நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்காக, "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2023ஆம் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஒரே நாடு, ஒரே தேர்தலில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து பல மாதங்களாக ஆராய்ந்து கடந்த மார்ச் மாதம், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வாய்ப்பு!
எதிர்ப்பும் ஆதரவும்:ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பாஜக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவு உள்ளிட்டவற்றை சேமிக்க முடியும் என்றும் அரசியல் இடையூறுகள் குறையும் என்றும் இந்த கட்சிகள் கூறுகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.