தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் பேரூரணியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக நேற்று உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் பெற்றோருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதியை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது குழந்தைகள் சந்தியா (வயது 13), கிருஷ்ணவேணி (வயது 10) மற்றும் இசக்கிராஜா (வயது 8) ஆகிய மூவரும் நேற்று 09.03.2024 மாலை தனது உறவினருடன் பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!