சென்னை:உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) புதன்கிழமை ஆங்கில புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புதிய வருடத்தை வரவேற்கும் விதமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு, தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தங்களது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “புத்தாண்டு 2025ல் அன்பு, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024 இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: “2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும். தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஓயாது உழைப்போம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்:“புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை:“மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக புதிய ஆண்டு, புதிய தொடக்கங்கள் மலரட்டும்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நியூசிலாந்து, கிரிமதி தீவில் 2025ஆம் ஆண்டு பிறந்தது...உலகநாடுகளில் உற்சாக கொண்டாட்டங்கள் களைகட்டின!
பாமக நிறுவனர் இராமதாசு: “2025ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும், மகிழ்ச்சி பெருகும், அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: “தமிழக மக்கள் இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன்: “2025 ஆம் ஆண்டு ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி- மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும். சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: “ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வியல் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாகக் கிடைக்க வேண்டும்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:“புத்தாண்டை ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்த்துவோம். நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்:“மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்.உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்போம், உண்மையான சமூக நீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர வாழ்த்துக்கள்” என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, புதுச்சேரி மற்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக பிரமுகர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட தலைவர்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.