சென்னை:காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று (டிச.05) வியாழைக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் முதலமைச்சர் கலந்துக்கொண்டு பேசியதாவது, “தமிழ்நாட்டின் காலநிலைத் திட்டத்தில் முக்கியத் தூணாக விளங்குவது, ஊரக நீர்ப் பாதுகாப்பு . 2024-2025-ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ. 500 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 701 இயற்கை வள மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகள் மூலம், 100 நாள் நீர் சேகரிப்பு இயக்கமானது, 1.3 லட்சம் நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு, 12 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 477 நகர்ப்புற நீர் நிலைகளை மறுசீரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நகர்ப்புறங்களின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB):
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, காவிரி கழிமுக பகுதியில், பருவநிலை மாறுதல் தழுவல் திட்டம், கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், பாசன வசதியை மேம்படுத்துதல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முதல் பகுதியாக, அடப்பாறு, ஹரிச்சந்திரா நதி, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாராண்ய கால்வாய் ஆகிய 6 ஆறுகள் மற்றும் 13 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"காலநிலை மாற்றம் மனிதர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்" - முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்!
வெண்ணாறு, பாமினியாறு, கோரையாறு, மனங்கொண்டனாறு, மரக்கா கோரையாறு, கடுவையாறு ஆகிய 6 ஆறுகள் மற்றும் 6 நீரேற்று நிலையங்களை மேம்படுத்துவதற்காக, முதல்நிலை திட்ட அறிக்கை ஆயிரத்து 825 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைக்கு கடனுதவி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் முயற்சியால், ராம்சர் (Ramsar Convention) தளங்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 18-ஆக அதிகரித்துள்ளது.