விருதுநகர்: காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடு அழிப்பு போன்ற பல்வேறு விசயங்களால் மனித-விலங்கு மோதல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காப்புக்காடுகளுக்குத் தொடர்பு இல்லாத விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வன உயிரினங்களால் குறிப்பாக, யானை, காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும் அதற்கான தீர்வினைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் விவசாயப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் என மொத்தம் 19 நபர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழக வனத்துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது.
காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேதம்:
மனித-காட்டுப்பன்றி மோதல் குறித்த தமிழக வனத்துறையின் அறிக்கை (Document on Human-Wild pig conflict in Tamilnadu - Wildlife Policy Research - AIWC 2024) அளிக்கும் தரவுகளின்படி, '3 ஆயிரத்து 331 காட்டுப்பன்றி மோதல் சம்பவங்களில் 3,117 பயிர் சேதங்களும் (94.4%), 13 மனித இறப்புகளும் (0.39%) 161 மனித காயங்களும் (4.9%) 4 கால்நடை அழிப்புகளும் (0.1%), 6 சொத்து சேதங்களும் (0.2%) நிகழ்ந்துள்ளன என்கிறது.
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை 23 விழுக்காடு, நெற்பயிர்கள் 19.9 விழுக்காடு, கரும்பு 10 விழுக்காடு, மரவள்ளிக்கிழங்கு 7.82 விழுக்காடு, மக்காச்சோளம் 9.5 விழுக்காடு, வாழைப்பழம் 4.6 விழுக்காடு, சோளம் 6 விழுக்காடு கடந்த ஓராண்டில் அழிவுக்குள்ளான பயிர்களாகும்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் தொல்லை மிகக் கடுமையாக உள்ளதென விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயம் கடும் பாதிப்பு:
அப்போது, திருச்சுழி அருகேயுள்ள கீழக்காஞ்சரங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.போஸ்-யிடம் கேட்ட போது, "காட்டுப்பன்றிகளால் எங்கள் பகுதியில் நெற்பயிர் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. விளைந்த நெல் வயல்களுக்குள் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதம் செய்து விடுகின்றன. இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது.
அதேபோன்று நிலக்கடலை விளைவிக்கும்போது கடும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக பலமுறை விருதுநகர் ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை" என வேதனை தெரிவிக்கிறார்.
அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
மேலும், முடியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற விவசாயி கூறுகையில், "ஒன்றரை ஏக்கர் நிலக்கடலை போட்டிருந்தேன். அதில் முக்கால் ஏக்கரை பன்றி அழித்துவிட்டது. அதேபோன்று நெல் ஒரு ஏக்கர் போட்டிருந்தேன். அதில் அரை ஏக்கரை பன்றிகள் அழித்துவிட்டன. நெல் வயலுக்கு இரவு நேரப் பாதுகாப்புக்காக வந்திருந்த என் மாமனார் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்து போனார்.
ஒரு பன்றியை நாய் கடித்துக் கொன்றுவிட்டது. இறந்துபோன பன்றியைப் புதைப்பதற்காகக் கொண்டு சென்ற போது, வனத்துறை என் மீது ரூ.30 ஆயிரம் அபராதம் போட்டுவிட்டது. எங்களது விவசாயத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதுதொடர்பான வனத்துறை அறிக்கையில், "காட்டுப்பன்றி மோதல் சம்பவங்களில் தருமபுரி மாவட்டம் முதல் இடத்திலும், திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இம்மோதல் அதிகமாக உள்ளதாகவும், செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதங்களில் ஓரளவிற்கும், ஏப்ரல் மாதத்தில் குறைவாகவும் உள்ளதாகவும்" கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குக்கிராமத்தில் பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ள நாராயணன்! அரசுப் பள்ளி மாணவன் சாதனை நாயகன் ஆன வரலாறு!
விளைச்சல் நேரத்தில் தாக்கும் காட்டுப்பன்றி:
திருச்சுழி பகுதியில் விவசாயிகளுக்காக பணியாற்றி வரும் பிரதான் என்ற தன்னார்வ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறுகையில், "காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் உள்ள விவசாயிகளோடு பணியாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாகவே இப்பகுதியில் விவசாயம் நலிவுற்று வருகிறது. காட்டுப்பன்றிகளால் பெரும் சிக்கலை இப்பகுதி விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
நல்ல விளைச்சல் ஏற்படும் சமயத்தில் இதுபோன்ற காட்டுப்பன்றி தாக்குதலால் பொருளிழப்பை சந்திக்கின்றனர். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கு ஒரு நல்ல முடிவெடுத்தால்தான் எதிர்காலத்தில் இப்பகுதியில் விவசாயத்தை காப்பாற்ற முடியும்" என்றார்.
வனத்துறை விளக்கம்:
அதைத் தொடர்ந்து, காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளின் தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் பெறப்பட்டவுடன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.