தூத்துக்குடி:பாஜக மாவட்ட தலைவர் தேர்தலின் போது ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலைவர்கள் பதவி காலங்கள் முடிவடைந்ததை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் வைத்து மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவிற்கான தலைவர் தேர்தல் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று (ஜன.31) நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஏற்கனவே தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வரும் சித்ராங்கதன், நெல்லையம்மாள், சிவமுருக ஆதித்தன் மற்றும் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் போது, பாஜக கட்சியின் ஒன்றிய தலைவர், மாவட்ட பிரதிநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுத்தனர்.
அப்போது, ஏற்கனவே தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வந்த சித்திராங்கதன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்ததால் அவரை கட்சியின் மாவட்ட தலைவராக மீண்டும் அவரை கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ரதி அறிவித்தார்.