கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட கொங்கு திருமண உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று (நவ.30) சனிக்கிழமை தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் சைவம், அசைவம் என விதவிதமான உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன.
கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் கோவை விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா கடந்த வாரம் நவம்பர் 23 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து, கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது.
உணவு வகைகள்:
கோவை உணவுத் திருவிழா (ETV Bharat Tamil Nadu) இந்த உணவு திருவிழாவில், பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு, சைவ, அசைவ உணவுகள், துரித உணவுகள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு உணவுப் பொருள் நிறுவனங்கள் அவர்களது பொருட்களைன் காட்சிபடுத்தியுள்ளனர்.
உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்ட உணவுகள் (ETV Bharat Tamil Nadu) இந்த உணவுத் திருவிழாவுக்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 799, குழந்தைகளுக்கு ரூ.499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக டிக்கெட்டுகளை புக் மை ஷோ (BookMyShow) தளத்தின் வாயிலாக மட்டுமே பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இந்த உணவு திருவிழா மாலை 6 மணியளவில் இருந்து சுமார் 9 மணி வரை நடைபெறுகிறது.
அதிகளவில் மக்கள் கூட்டம்:
உணவுத் திருவிழாவில் கூடிய மக்கள் கூட்டம் (ETV Bharat Tamil Nadu) ஒரு நபர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்து விட்டால் அன்லிமிடெட் முறையில் சாப்பிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உணவுத் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருகை புரிந்து உணவுகளை ருசித்துள்ளனர்.
உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்ட உணவுகள் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கோவையில் களைக்கட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி; பொதுமக்கள் உற்சாகம்!
எதிபார்த்ததை விட அதிகமான மக்கள் குவிந்ததால், உணவு அரங்குகளில் ஏராளமான மக்கள், தட்டுகளோடு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவில் முறையான ஏற்பாடு செய்யாமல் இருந்ததே இந்த குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மோதல்:
அதிகளவிலான கூட்டம் காணப்பட்ட நிலையில் உணவு பரிமாறும் ஒரு இடத்தில் இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியவர்கள் இளைஞர்களை அவமரியாதையுடன் பேசியுள்ளனர்.
கோவை உணவுத் திருவிழா காணொளி (ETV Bharat Tamil Nadu) மேலும், உணவுத் திருவிழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுகிறார்கள். உணவை கேட்டால் தர மறுக்கிறார்கள். கெஞ்சி உணவை வாங்க வேண்டி சூழல் உள்ளது. இங்கு தரும் பணத்திற்கு ஸ்டார் ஹோட்டலில் ஆற அமர்ந்து நன்றாக சாப்பிட்டிருக்கலாம், உணவும் பாதி வெந்தும் வேகாமலும் ருசியில்லாமல் இருப்பதாக பலரும் புலம்பியபடியே சென்றுள்ளனர்.
இது குறித்து வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், சமூக வலைதளங்களிலும் பலர் கொங்கு உணவுத் திருவிழா குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.