திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 1998ல் கட்டப்பட்ட இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த கோயிலுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சீல் வைக்கப்பட்டது.
பிறகு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு சீல் அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அண்மையில் எட்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவினை ஒரு தரப்பினர் செய்து வந்துள்ளனர். அப்போது பட்டியலின மக்கள் தங்களது பங்கிற்காக ஆலய புனரமைப்பு பணிகளுக்கு பணத்தைக் கொடுத்துள்ளனர். அதை மாற்று சமூகத்தினர் வாங்கவில்லை எனk கூறப்படுகிறது.
மேலும் அவர்களை கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என பட்டியலின மக்கள், வருவாய்த் துறையில் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம், இரு தரப்பை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து வட்டாட்சியர் சரவணகுமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை எட்டியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்ற போது மாற்று சமூகத்தினர் தங்களுக்கு சொந்தமான பாதையில் வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேறு வழியில் வர முயன்ற போது, அதுவும் பட்டா வழி என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கால்வாயில் முட்புதர் மண்டி கிடந்த வழியாக செல்ல முயன்ற போதும் சிலர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.