அரசு, தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி.. நடத்துநர், ஓட்டுநர் இடையே கைகலப்பு! தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு இன்று (மார்ச் 26) காலையில் 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில், இரு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே போட்டி நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளது. அப்போது, பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், அரசுப் பேருந்தை வழிமறித்து நிறுத்தி விட்டு, பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது சமாதானப்படுத்திய அரசுப் பேருந்து நடத்துநரை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் விரட்டிச் சென்று நடுரோட்டில் வைத்து தாக்கி உள்ளனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற பெண் காவலர் ஒருவர், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ் அணி! - 5 Nomination File O Panneerselvam