சென்னை: கூட்டணிக் கட்சிகளை தோழமைக் கட்சிகள் என்றே உரிமையோடு அழைத்து வரும் திமுக தரப்பிலிருந்து, காட்டமான பதில் ஒன்று வந்துள்ளது. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், "சென்னையில் மாணவி ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை என்ற 'டிரெண்ட்' உருவாக்க சிலர் துடிக்கிறார்கள். அதற்காக போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக பாலகிருஷ்ணன் வக்கீலாக மாறுகிறார்?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அப்படி என்ன பேசிவிட்டார் கே.பாலகிருஷ்ணன்?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 3ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது" என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்த அவர்,
- "தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப் படுத்திவிட்டீர்களா நீங்கள்?
- எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல் படுகிறது?
- போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன?
- ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா?
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?" என கேள்விகளை அடுக்கினார்.
முதல் பக்கத்திலேயே பதிலளித்த முரசொலி:
கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு சூட்டோடு சூடாக முகப்புப் பக்கத்திலேயே பதிலளித்துள்ள முரசொலி, சில பதில் கேள்விகளையும் முன்வைத்துள்ளது. "இது தோழமைக்கு இலக்கணம் அல்ல"என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள முரசொலி, "தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்" என குற்றம் சாட்டியுள்ளது.
எதற்காக வீதியில் நின்று கேள்வி கேட்க வேண்டும்?