திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக பல்வேறு சமூக மண்டகப்படியில் பல அவதாரங்களில் எழுந்தருளி, நகர்வலம் வந்த முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் கடைசி நாளான நேற்று கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பின் இரவு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் முத்தாலம்மன் கோயில் முன் வைக்கப்பட்டிருக்கும் வழுக்கு மரத்தில் ஏறும் நிகழ்வு நடைபெறும். இதன் பின்னரே அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இறுதி நாளான நேற்று தாரை தப்பட்டை, வானவேடிக்கைகள் முழங்க, மஞ்சள் நீராடி முளைப்பாரி ஊர்வலத்துடன் கடைவீதி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.