சென்னை:முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஏப்.9) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பன் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மைதானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனும் நிலையில், அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்னர், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசிய போது"காரைக்குடி பகுதியிலிருந்து திராவிட இயக்கத்தின் தொண்டராக பணியைத் தொடங்கினார், ஆர்.எம்.வீரப்பன். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல திட்டங்களை அறிவிக்க காரணமாக இருந்தவர். அருளாளர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஏனென்றால், ஆர்.எம்.வீரப்பன் அனைவரோடும் அன்போடு பழகக்கூடியவர்.
இந்த தேர்தலிலும் அவர் பங்காற்ற வேண்டும் என்பதற்காக தனது எம்.ஜி.ஆர் கழகம் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். குறிப்பாக படுத்த படுக்கையாக இருந்த நேரத்தில் கூட, இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் கழகம் தனது பணியை ச் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கடைசியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இறுதி நேரத்திலும் கூட யாரை அடையாளப்படுத்த வேண்டும் என அவர்களை அடையாளப்படுத்தியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மேகாலயா ஆளுநர் இல.கணேசன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் பாரதிராஜா: "தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசியல்வாதி மற்றும் நேர்மையாளர். அரசியல் நாகரிகத்தோடு எப்போதும் நடந்து கொள்ளும் சிறந்த மனிதர். எனக்கும், அவருக்கும் பல ஆண்டுகள் பழக்கம், ஆர்.எம்.வீரப்பன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை".