கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய, கிருஷ்ணன் கோவில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இது 1945ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், முக்கடல் அணையில் இருந்து தண்ணீர், குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்த பின்னர், நாகர்கோவில் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதே பின்னாளில், இங்கு 3 நிலையங்கள் அமைக்கப்பட்டு, 200 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் சுத்திகரிக்க குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சுத்திகரிப்பு நிலையத்தில் நான்கு குளோரின் சிலிண்டர்கள் உள்ளன. ஒரு சிலிண்டரில் ஒரு டன் அளவிற்கு குளோரின் இருக்கும். இந்த சிலிண்டரில் குளோரின் காலியாக காலியாக, சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருப்பவர்கள் அதனை மாற்றி வருவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று (ஏப்.25) காலை சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டரில் ஒரு சிலிண்டர் காலியானதால், புதிய குளோரின் சிலிண்டரை மாற்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, குளோரின் சிலிண்டரில் இருந்து குளோரின் கேஸ் வெளியேறி உள்ளது.
சிறிது நேரத்தில் குளோரின் அதிக அளவு வெளியேறியதால், அங்கு பணியில் இருந்த ஐந்து ஊழியர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.