விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் இயங்கிவரும் ஓர் தனியார் மேல்நிலை பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து அப்பள்ளியில் பயின்று வந்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் நிவாரண வழங்க உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பழனிவேல் -சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது மகள் லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி இன்று விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சேதமடைந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, கழிவுநீர் தொட்டியின் இரும்புமூடி உடைந்து சிறுமி கழிவு நீர்தொட்டியின் உள்ளே விழுந்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
'பள்ளியின் மீது உரிய நடவடிக்கை':இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குழந்தை காலை 11 மணியளவில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தினசரி மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பள்ளி நிர்வாகம், இன்று மாணவர்களை மாலை மூன்று மணிக்கே பெற்றோர்களை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், மாணவர்களை பள்ளி ஊழியர்களை கொண்டு அவசர கதியில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறை அதிகாரிகள், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால் தான் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டியில்தான் குழந்தை விழுந்ததா?
சிறுமிகளின் உறவினர்கள் கூறுகையில், "குழந்தை விழுந்த கழிவுநீர் தொட்டியில் ஒரு நபர் இறங்கி குழந்தையை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்திருந்தால் அதற்கு அடிப்பட்டிருக்கும். மேலும், குழந்தையை தூக்கிய நபருக்கும் அடிப்பட்டிருக்கும். குழந்தையை யார் தூக்கியது? எவ்வாறு தூக்கினர்? என்பது குறித்த விவரங்கள் தெரிய வேண்டும். கழிவுநீர் தொட்டியில் ஒரு நபர் இறங்கும் அளவுக்கு இடமில்லை” என்று அவர்கள் சந்தேகத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ரூ 25 லட்சம் இழப்பீடு தர வலியுறுத்தல்:இதனிடையே,தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததற்கு பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யாத அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.