சென்னை:தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நீதிமன்றத்திற்கு சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்பதற்கு கண்டனங்களையும், வருகைப் பதிவேடு வழக்கறிஞர்கள் பாராமரிப்பதை ஏற்க முடியாது எனவும், இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமை செயலகத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரி சங்கர் உள்ளிட்டோர் தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசின் பொதுத் துறை செயலாளர் ஜூன் 12 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வுகளில் அரசு சார்பான வழக்கு, அதன் மீதான விசாரணை ஆகியவற்றைக் கண்காணிக்க தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளிலும் பிரிவு அலுவலர், அரசு சார்புச் செயலாளர் நிலையில், நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான பணிகள், கடமைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுத்துறை செயலாளர் நீதிமன்ற வழக்குகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் தொடர்பு அலுவலர்களுக்கு 12 கட்டளைகளை (பணிகள், கடமைகள் தொடர்பாக) தெரிவித்துள்ளார். அதில் முதலாவது மற்றும் மூன்றாவது பணிகள் கடமைகளாக பொதுத்துறைச் செயலாளர் குறிப்பிடுவது யாதெனில்
i) ஒவ்வொரு துறையும் தொடர்பு அலுவலர்களை நாளொன்றுக்கு இருசுழற்சி முறைகளில் முதல் சுழற்சியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இரண்டாவது சுழற்சியில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பணியாற்றும் வகையில் நியமிக்க வேண்டும். தலைமைச் செயலகத் துறைகளால் நியமனம் செய்யப்படும் தொடர்பு அலுவலர்கள் தங்களது வருகையினை அரசு வழக்கறிஞர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர்களது வருகைப் பதிவானது அரசு வழக்கறிஞர் அலுவலகங்களில் பராமரிக்கப்படும். பொதுத் துறை செயலாளர் தலைமைச் செயலகத் துறைகளால் நீதிமன்ற வழக்குகளை கண்காணிப்பதற்காக பிரிவு அலுவலர் , அரசு சார்புச் செயலாளர் நிலையில் நியமனம் செய்யப்படும் தொடர்பு அலுவலர்களுக்கு வகுத்துள்ள 12 பணிகள்-கடமைகளில் ஒன்று மற்றும் மூன்று ஆகியவற்றிற்கு கடுமையான கண்டனங்களை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
தலைமைச் செயலகப் பணியாளர்களின் மாண்பினையும் கண்ணியத்தினையும் சீண்டிப் பார்க்கும் இந்த இரண்டு பணிகள் - கடமைகள் ஆகியவை உடனடியாக முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தனது உறுப்பினர்களான தலைமைச் செயலகப் பணியாளர்களின் சுயமரியாதையையும், கண்ணியத்தினையும் மாண்பினையும் எள்ளளவும் விட்டுக் கொடுக்காது என்பதனை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பொதுத் துறைச் செயலாளரின், கடிதத்தில், தொடர்பு அலுவலர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள கடமைகள் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகமாக சங்கம் பார்க்கிறது.
தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு Do What I Say என்ற பாணியில் பொதுத் துறை செயலாளரால் கட்டளையிடப்பட்டுள்ளது. இதனை எள்ளவும் ஏற்க இயலாது. சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை அமர்வு உட்பட) அரசு வழக்கறிஞர்கள் அலுவலகங்களில் நடைமுறையில், அனைத்துத் துறைகளிலிருந்தும் ஏற்கனவே பணியாளர்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாள்தோறும் கண்காணித்து வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர்கள் அலுவலகங்களில் பணியாளர்கள் காலை 9 மணிக்கு மேல்தான் வருவார்கள். அதைப்போல் இரவு நேரங்களில் மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகளை பொறுத்து பணியாற்றுவார்கள். அதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்படும் போது, அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள். அவர்களை உணவு இடைவேளையின் போதும், மாலையில் நீதிமன்ற அலுவல் முடிந்த பின்னர் தான் சந்திக்க இயலும்.
இவ்வாறான நடைமுறையினை குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இரு சுழற்சிகளில் பணியாற்றிட வேண்டும் என்பதோடு, இப்பணியாளர்களின் வருகைப் பதிவேடு அரசு வழக்கறிஞர் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் என்பதனை அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்வதை விட வேறென்ன சொல்வது.
இவ்வாறு, நாள் முழுக்க தலைமைச் செயலகத்தின் 36 துறைகளிலிருந்தும் நியமிக்கப்படும் தொடர்பு அலுவலர்கள் நாள் முழுவதும் தங்களது அன்றாட அலுவலகப் பணிகளை விட்டுவிட்டு, நீதிமன்றத்தில் அமர்வதற்குக் கூட இடமில்லாமல் அவர்கள் இன்னல்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க இயலாது. நீதிமன்றங்களின் அலுவலக நேரத்திற்கும் வேலை நாட்களுக்கும் அரசு அலுவலக நேரம் - வேலை நாட்களும் முற்றிலும் வெவ்வாறானவை.
அரசு வழக்கறிஞர் அலுவலகங்களில் பதில் மனு தாக்கல் செய்வது, பதில் மனுக்களின் மீதான அரசு வழக்கறிஞர்களின் திருத்தங்களைப் பெறுவது, வழக்கு விசாரணையினைக் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களில் திக்குமுக்காடி, இப்பணிக்கு பணிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் இதுநாள் வரை எந்தவொரு பொதுத்துறைச் செயலாளரும் செவிமடுத்ததில்லை என்பதுதான் கள யதார்த்தம்.
அதோடு மட்டுமல்லாமல், தற்போது அனைத்து நீதிமன்றங்களும் வாரம், நாள் வாரியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிடுகின்றன. இன்றைய உலகினை தகவல் தொடர்பு கோலோச்சி வரும் காலத்தில், பணியாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் தவம் கிடப்பது என்பது நகைப்பிற்குரியது.
மேலும், பொதுத்துறை செயலாளரின் கடிதத்தில் சென்னை நீதிமன்ற மதுரை அமர்வு தொடர்பான வழக்கு விவரங்களை சம்மந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களிடம் தொலைபேசி மூலமாகப் பெற்று துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருப்பது என்பது, சென்னைக்கும் மதுரைக்கும் வெவ்வெறான நிலைப்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 90 விழுக்காடு வழக்குகள் அனைத்துமே அரசு துறைத் தலைமை அலுவலகங்களுக்குத் தொடர்பானவை.
அதனைக் கண்காணிப்பதற்கு துறைத் தலைமை அலுவகங்களிலிருந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களும் செயலகத் துறைகளுடன் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணையினை எந்தவித சிக்கலுமின்றி கையாண்டு வருகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் அலுவலகங்களே, வழக்குகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டவைதான். அதன் நோக்கத்தினையே சிதைக்கும் வண்ணம் தற்போதைய பொதுத்துறைச் செயலாளரின் கடிதம் அமைந்துள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, சென்னை உயர்நீதிமன்ற (மதுரை அமர்வு உட்பட) அரசு வழக்கறிஞர் அலுவலக நடைமுறை குறித்த அடிப்படைப் புரிதலுமின்றியும் எந்தவித முன் யோசனையுமின்றியும், தலைமைச் செயலகப் பணியாளர்களின் கண்ணியம், மாண்பு, சுயமரியாதை ஆகியவற்றை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தோடும், தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கும் அரசிற்குமான நல்லுறவினையும் சிதைக்கும் வகையிலும், நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கும் தொடர்பு அலுவலர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள பணிகள்- கடமைகள்| மற்றும் III ஆகியவற்றை உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றம்! - Nandanam Arts College