தூத்துக்குடி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 4 முனை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 27 ஆம் தேதியாகும். மனு தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளதால் முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் நேற்று முதலே வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கினர். அதன்படி, பாஜக, அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில், முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ராமநாதபுரம்- தூத்துக்குடி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை சிந்தலகரையில் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து நாங்குநேரி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு, திருநெல்வேலி-கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, இரவு தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து, தூத்துக்குடி, தமிழ் சாலை ரோட்டில் காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
பின்னர், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதி மற்றும் மீனவர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளார். அச்சமயத்தில் அம்மக்கள் தங்கள் வீட்டுக்கு முதலமைச்சரை அழைத்துள்ளனர். அதன்பேரில், சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்குள் திடீரெனெ சென்ற முதலைச்சர் அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்கள் வீட்டில் தேநீர் அருந்தி, தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையே ஆங்காங்கே மீனவர்கள் முதல்வரிடம் மனுகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், தூத்துக்குடி மாநகர பகுதியின் முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி வாக்குகளை சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.
முதலமைச்சரின் இந்த வாக்கு சேகரிப்பின் பொழுது, தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
இதையும் படிங்க:மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும்: நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவேச பேச்சு! - Mk Stalin Propaganda