சென்னை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், குவைத், சார்ஜா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானம் மற்றும் அந்த நாடுகளிலிருந்து சென்னை வரும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்னும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை ஓயாததன் காரணத்தால், தொடர்ந்து 2வது நாளாக இன்று துபாய், குவைத், சார்ஜா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 12 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதாவது, நேற்று இரவு துபாயிலிருந்து சென்னை வந்து, மீண்டும் சென்னையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், அதைப்போல் இன்று அதிகாலை சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலையில் சென்னையிலிருந்து துபாய் செல்ல எமிரேட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சென்னையிலிருந்து துபாய் சென்று விட்டு, மீண்டும் துபாயிலிருந்து இன்று காலை சென்னை திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நேற்று துபாய் சென்று விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பி வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ஆகிய 8 துபாய் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நேற்று இரவு சென்னையிலிருந்து குவைத் சென்று விட்டு, இன்று காலை குவைத்தில் இருந்து சென்னை திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர, அபுதாபி, சார்ஜா, மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் ஒரு சில விமானங்கள், பல மணி நேரங்கள் தாமதமாக, சென்னை வந்து விட்டு மீண்டும் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.