சென்னை: தெற்கு ரயில்வேயில் சீனியர் டிவிஷனல் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ராம் பிரசாத். இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ராம் பிரசாத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூன்று வங்கிகளில் 38 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ராம் பிரசாத்திற்கு பிடிவாரண்டு இருப்பதாக கூறி, சென்னை பெரிய மேட்டில் உள்ள லாட்ஜில் வந்து தனியாக அறை எடுத்து தங்குமாறு மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு பயந்து சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த இரண்டு நாட்களாக ராம் பிரசாத் தங்கியுள்ளார். அப்போது, வீடியோ கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர், 38 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பிடிவாரண்டு இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறியுள்ளார். மேலும், வேறு யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இதுபோல கடந்த இரண்டு நாட்களாக இவர்களுக்குள் வீடியோ கால் உரையாடல் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளான ராம் பிரசாத் என்ன செய்வதென்றே தெரியாமல் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தனது கணவர் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடி வந்த அவரது மனைவி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.