சென்னை:தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர வாகனம் ஒன்று இரண்டு நாட்களாக நின்று கொண்டிருப்பதாக, போரூர் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, அம்பத்தூர் அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்த பாண்டியன் (37) என்பவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அவரை காணவில்லை என அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், போரூர் மேம்பாலத்தின் மேல் இருந்த வாகனம் பாண்டியன் ஓட்டி வந்த வாகனம் என விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, போரூர் மற்றும் அம்பத்தூர் போலீசார் சேர்ந்து பாண்டியன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலையடுத்து, போரூர் போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.