சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது. இரு நபர் பிணை ஏற்கப்பட்டதால் சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59 முறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆகஸ்ட் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனைகள்:செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு இரு நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. கரூரில் களைகட்டிய திமுகவினரின் கொண்டாட்டம்!
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்:நிபந்தனைகளாக, 25 லட்சம் ரூபாய்க்கான பிணை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதின்படி, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை பத்திரம் தாக்கல் செய்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்து, 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளித்துள்ளனர்.
நீதிபதி மறுப்பு :செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஜாமீன் உத்தரவாதங்களை அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடமா? அல்லது நீதிபதியிடமா? தாக்கல் செய்ய வேண்டுமா? என்பதில் குழப்பம் உள்ளது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி தரப்பிடம் தெரிவித்து, அதனை ஏற்க மறுத்துள்ளார்.
பிணை உத்தரவாதம் ஏற்பு: மேலும், அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்ட பின்னர் பிணை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வர உத்தரவிடப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அவரது 2 உறவினர்கள் வழங்கிய 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்களை ஏற்க ஆட்சேபணை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி விடுதலைக்கான பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுள்ளது.
செந்தில் பாலாஜி விடுதலை: செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட உள்ளது. சற்று நேரத்தில் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்