தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லீக்கான மாணவி எஃப்ஐஆர்.. கண்காணிப்பில் 14 பேர்.. இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு..! - CHENNAI STUDENT FIR LEAK

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் 14 நபர்களை சென்னை மாநகர காவல் துறை கண்காணித்து வருகிறது.

காவல் ஆணையர் அருண், அண்ணா பல்கலை (கோப்புப்படம்)
காவல் ஆணையர் அருண், அண்ணா பல்கலை (கோப்புப்படம்) (credit - etv bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 5:56 PM IST

Updated : Jan 4, 2025, 10:14 AM IST

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி மாணவி ஒருவர், ஞானசேகரன் என்ற நபரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளி உடனே கைது செய்யப்பட்டிருந்தாலும் இந்த விவகாரத்தில் மேலும் பல சம்பந்தப்பட்டிருக்கலாம், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், மாணவியிடம் குற்றவாளி நடந்து கொண்ட விதம் மற்றும் மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானதால் பெரும் விவாத பொருளாகவும் மாறியது. அதனைத் தொடர்ந்து விவகாரம் தொடர்பாக, கடந்த 26 ஆம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், IPC யில் இருந்து BNSக்கு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வன்கொடுமை தொடர்பான எஃப் ஐ ஆர் மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியே கசிய, தொழில்நுட்ப பிரச்சனையே காரணம் என தேசிய தகவல் மையம் (National Informatics Centre) விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க:யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!

தொழில்நுட்ப கோளாறு

அதில், '' மாநில குற்ற ஆவண காப்பகம் வழங்கிய பட்டியலின்படி, முக்கியமான பிரிவுகளின் கீழ் யாரும் பார்வையிட முடியாத வகையில் தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சியில் இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு (BNS) மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல் தகவல் அறிக்கையினை பொதுவெளியில் யாரும் பார்க்க முடியாமல், தடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

தேசிய தகவல் மையம் விளக்கம் (credit - etv bharat tamil nadu)

மேலும், இது தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம், எஃப் ஐ ஆர் பக்கத்தை பார்வையிடுவதற்கான அனைத்து தடை செய்யும் முக்கிய பிரிவுகள் மற்றும் அதன் துணை பிரிவுகளை முழுமையாக சரி பார்க்கும்படி, மாநில குற்ற ஆவண காப்பகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக'' அரசு தொடர்பான மின்னணு கோப்புகளை பராமரிக்கும் தேசிய தகவல் மையத்தின் இயக்குனர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

நியூஸ் சேனல்கள் மீது வழக்கு

இதனிடையே எஃப் ஐ ஆர் தொடர்பான விவரங்களை கடந்த 25ஆம் தேதி ஒளிபரப்பு செய்த 6 தொலைக்காட்சிகளை கண்காணித்த மாநகர காவல் துறை, நீண்ட நேரம் ஒளிபரப்பு செய்த இரண்டு தனியார் தொலைக்காட்சிகளின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 72 மற்றும் 67 (a) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

கண்காணிப்பில் 14 பேர்

மேலும், எஃப்ஐஆர் வெளியான தினத்தன்று, எஃப்ஐஆர்-ஐ பார்ப்பதற்கு மற்றும் பதிவிறக்கம் செய்ய இரண்டு மூன்று தடவை தொடர்ச்சியாக எப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்யப்படும் இணையதள பக்கத்தினை Log in செய்து OTP வரப்பெற்ற 14 நபர்களை மாநகர காவல் துறை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது என்றும் தேவைப்படும் பட்சத்தில் 14 பேரிடமும் மேலும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Last Updated : Jan 4, 2025, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details