சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், 16ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஒரு சில இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் இருக்கும் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே, தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இருக்காது என அறிவித்திருந்த நிலையில், மக்கள் மழை வெள்ளத்தின் மீது இருக்கும் அச்சத்தினால் இயல்பாக வாங்கும் பொருட்களை விட அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். முதலில் பேசிய ராதாகிருஷ்ணன், "நாளைக்கு மழை பெய்யும் என்பதால் நாங்கள் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல வந்தோம். ஆனால், காய்கறிகள் மற்றும் பழங்கள் சீக்கிரமாகவே விற்றுவிட்டன. ஒரு சில பொருட்கள் மட்டுமே உள்ளன.
இதையும் படிங்க :வடகிழக்கு பருவமழை: பள்ளி, கல்லூரி விடுமுறை முதல் 4 பேர் பலி வரை.. தமிழ்நாடு மழை பாதிப்புகள் ரவுண்ட் அப்!
நாளைக்கு மழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் வேகமாகவே வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். நாங்கள் எதிர்பார்த்து வந்த காய்கறிகள் இங்கே இல்லை. குறிப்பாக, முட்டைகோஸ், கேரட், காலிஃப்ளவர், தக்காளி ஆகியவை இல்லை. இதனால் நாங்கள் வேறு கடைகளுக்கு சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.