சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், முடிச்சூர், நெடுங்குன்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருவதாகத் தொடர்ச்சியாக பீர்க்கன்காரணை காவல் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணிகள் மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பீர்க்கன்காரணை ஏரிக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பள்ளி மாணவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்து வந்தது.
இதையடுத்து அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த போதைப்பொருள் கிடைத்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பீர்க்கன்காரணை தேவநேச நகர்ப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), சாமுவேல் (24), முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (25) ஆகியோர் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
தொடர்ந்து மூவரையும் பிடிக்க போலீசார் சென்றபோது, அவர்கள் ரயில் மூலம் மும்பை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு வலைவிரித்துக் காத்திருந்த காவல்துறையினர், குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் சென்னைக்கு திரும்பியதை அறிந்தனர். உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, மூவரையும் சென்னையில் வைத்து கையும், களவுமாகப் பிடித்தனர்.
கடத்தல்காரர்களை கைது செய்த பீர்க்கன்காரணை காவல்துறையினர் (ETV Bharat Tamil Nadu) பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மும்பையில் இருந்து சட்ட விரோதமாக கடத்திவந்த 1,200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்ட நிலையில், சமூக வலைத்தளம் அவர்கள் மூவரும் நண்பர்களானவர்கள் என்பதும், மூன்று பேரும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் தாமாக கஞ்சா விற்பனை செய்ய முடிவு செய்து, டிசம்பர் மாதம் ஆந்திராவுக்குச் சென்று கஞ்சா வாங்கி வந்து ஜனவரி மாதம் முதல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: பெண் காவலரிடம் செயின் பறிப்பு! 'தர்ம அடி' வாங்கிய போதை ஆசாமி!
மேலும், இவர்கள் கஞ்சா விற்பனையில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் வெளி மாநிலங்களுக்குச் சென்று உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு கஞ்சா விற்பனை செய்து வரும் பணத்தில் மூன்று பேரும் ஈ.சி.ஆர்-இல் உள்ள ரிசார்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இவர்கள் குறிப்பாகத் தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஐ.டி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.