சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் கேளிக்கை விடுதி கட்டடம், மூன்று மாடிகளைக் கொண்டது. இந்த நிலையில், இன்று இந்த கட்டடத்தில் உள்ள முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூடம் இயங்கி வருகிறது. இதில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் மதுபான கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அபிராமிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேர் உடலை மீட்டனர். இதையடுத்து, மூன்று பேர் உடலையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அபிராமிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட தகவலில், மணிப்பூரைச் சேர்ந்த லாலி (22), மேக்ஸ் (21) மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிலோன் ராஜ் (45) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்பவதும், மூவரும் மதுபான விடுதியில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், விபத்து நடந்த மதுபானக் கூடம் உரிய அனுமதி பெற்று நடத்தி வந்ததும், தற்போது ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான சலுகைகள் உடன் இந்த மதுபானக்கூடம் நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இன்று இரவு ஐபிஎல் போட்டிகளை மதுபானக் கூடத்தில் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் புக் செய்ததாகவும், இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடைபெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மதுபானக் கூடத்தின் அருகே மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் காரணமாக ஏதாவது விபத்து நடந்ததா உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை. ஏனெனில் மெட்ரோ பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும், கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையுடன் இணைந்து மீட்புப் பணியில் உதவ தயாராக உள்ளோம்” என தங்களது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது நாதகவினர் தாக்குதல்? - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன? - Krishnagiri Naam Tamilar Katchi