தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது - சென்னைக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - CYCLONE FENCHAL

ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகலில் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 6:46 PM IST

Updated : Nov 29, 2024, 8:33 PM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாகப்பட்டினத்தின் கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து வருகிறது.

மேலும், கடந்த 6 மணி நேரமாக 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கூடுதல் வேகத்துடன் 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையான வட தமிழகம் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதுமட்டும் அல்லாது, ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை முற்பகலில் கரையை கடக்கும் வகையில் நோக்கி நகர்கிறது.

பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamilnadu)

புயல் கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல, நாளை (நவ.30) கரையை கடக்கும் நேரத்தில் வட தமிழ்நாடு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என்பதால் இந்த 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு பகுதியில் காற்று குவியல் அதிகரித்ததால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது.

இதையும் படிங்க:கனமழை எச்சரிக்கை: பயணிகளுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்..!

இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. நாளை பிற்பகலில் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கக் கூடும். ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரியில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையின் தென்கிழக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்யும்.

அதேபோல, தரைக்காற்றை பொறுத்தவரையில் இன்று (நவ.29) முதல் நாளை (நவ.30) வரை வட தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், நாளை (நவ.30) ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் பொழுது சூறாவளி காற்றானது மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதன் காரணமாக, மீனவர்கள் அடுத்து இரண்டு தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுமட்டும் அல்லாது, ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வட தமிழக கரை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 29, 2024, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details