சென்னை:வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் விளைவாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிவையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சநதித்தார்.
அப்போது அவர் கூறும்போது,"நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழையும் 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கன மழை எச்சரிக்கை பொருத்த அளவில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம் முதல் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும்.
மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழக மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம்.
இயல்பை விட அதிகம்:வடகிழக்கு பருவமழை பொருத்த அளவில் அக்டோபர் முதல் இன்று வரையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையின் அளவு 47 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட பதினாறு சதவீதம் அதிகம். இக்காலத்தில் பெய்யக்கூடிய சராசரி மழையின் அளவு 40 சென்டிமீட்டர்.
மழைப்பதிவு நிலவரம் (சென்டிமீட்டரில்):இன்று பிற்பகல் இரண்டு மணி வரை நிலவரப்படி, நெற்குன்றம் - 10 மீனம்பாக்கம் - 8, அண்ணா பல்கலைக்கழகம் -7, தரமணி - 7, பூந்தமல்லி, நந்தனம், கொளப்பாக்கம் தலா 6 சென்டிமீட்டர் மழைப்பதிவாகி உள்ளது.
வரும் 15 ஆம் தேதி அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
பல்வேறு தொழில்நுட்பம், கணிப்புகள் இருந்தாலும் அறிவியல் மிக முக்கியம். பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் சில நேரங்களில் கணிப்புகள் தவறாகலாம். தொழில்நுட்பத்தால் மட்டுமே வானிலையை முழுமையாக கணிக்க முடியாது. அறிவியலும் முக்கியம்" என்று பாலச்சந்திரன் கூறினார்.