சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக, 2024-25ஆம் கல்வியாண்டில் 208 சென்னை தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 24,700 மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை பள்ளிகளில் 208 தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 16,366 மாணவர்கள் ஜூலை 2024 இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் 2024 வரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இச்சுற்றுலாவானது திருவொற்றியூர் மண்டலம் தொடங்கி வாரந்தோறும் மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு பேருந்துக்கு சுமார் 55 மாணவர்கள் வீதம், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலமாக முதற்கட்டமாக ரூ.3129 லட்சம் மதிப்பில் 298 பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக 18 சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 1255 மாணவர்கள் மற்றும் ஒரு பேருந்திற்கு 4 ஆசிரியர்கள் என 24 பேருந்துகளில் இன்று (ஜூலை 18) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.