சென்னை:சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எச்.சி.எல் நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் ஆகியவை ஒன்றிணைந்து சென்னையில் நடைபெறவுள்ள சைக்கிள் ஓட்டும் போட்டியின் அறிமுக விழா இன்று (ஜூலை 18) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டனர்.
இந்த சைக்கிள் போட்டியானது, அக்டோபர் 6ஆம் தேதி மாயாஜால் பகுதியிலிருந்து துவங்கி கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு உள்ளிட்ட 55 கிலோமீட்டர் பயணம் செய்து, மீண்டும் மாயாஜால் பகுதியில் நிறைவடைகிறது. இதற்கான முன்பதிவு நாள் செப்டம்பர் 22ஆம் தேதி வரை உள்ள நிலையில், www.hclcyclothon என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, குவாஷ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் தற்போது சைக்கிளிங் போட்டியும் நடைபெறப் போகிறது. இந்த சைக்கிளிங் போட்டி ஏற்கனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதை போல் இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட மாநகராட்சிகளில் இருக்கும் இடங்களில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த போட்டியை நடத்துவதற்கு காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி என அனைவரும் ஒன்றிணைத்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி நடத்துவது மூலம் சைக்கிளிங் பயிற்சியின் முக்கியத்துவங்களை மக்கள் அறிவார்கள். மேலும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த போட்டியால் பலர் நன்மையடைவார்கள்.