சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், கடந்த அக்.20 அன்று இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக ஆண், பெண் இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த போலீசார் அவர்களை வீட்டிற்கு கிளம்புமாறு அறிவுறுத்தினர்.
அப்போது அந்த இருவரும் போலீசாரை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மிரட்டினர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அறிவுறுத்திய போலீசாரை தகாத முறையில் பேசியதோடு, கேலி செய்த அந்த நபர் ஆத்திரமாக அங்கிருந்து காரை எடுத்து புறப்பட்டு சென்ற சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க:ரவுடியை முகம் சிதைத்து கொன்ற கும்பல்... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரின் பெண் தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என தெரிய வந்தது.
இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்