தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் புகாரில் சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம்! - CHENNAI JC SUSPENDED

பாலியல் புகாரில் சிக்கிய சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம்
மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2025, 12:03 PM IST

சென்னை:பாலியல் புகாரில் சிக்கிய சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார் ஐபிஎஸ். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல்ரீதியாக சில தினங்களாக தனக்கு தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பெண் காவலரின் புகாரின் அடிப்படையில் டிஜிபி உத்தரவின் பேரில் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர் கொடுத்த புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை அறிக்கையும் டிஜிபி அலுவலகத்தில் விசாகா கமிட்டி சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகேஷ் குமார் ஐபிஎஸ் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பிறகு டிஐஜி பதவியில் தற்போது பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பு சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து இணை ஆணையராக இருந்த நிலையில் சமீபத்தில் தான் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டிருந்தார்,

மேலும் கடந்த சில நாட்களாகவே இணை ஆணையர் மகேஷ் குமார் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. மேலும் மகேஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் மற்றொரு பெண் அதிகாரியும் மகேஷ் குமார் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் புகாரில் காவல்துறை இணை ஆணையர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details